Sunday, February 20, 2011

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

எனது தந்தை திரு இரா.பு. இரவிந்திரன் (கைபேசி எண்: 9842170429) அவர்கள் எழுதிய "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" என்ற புத்தகத்தை இந்த வலைப்பூக்கள் வாயிலாக உங்கள் முன் வழங்குவதன் மூலம் நான் பெருமைபடுகிறேன்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிராணர்க்கு வாய் கோபுரவாசல்
தள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலன் ஐந்தும் காளாமணி விளக்கே - திருமூலர்

1 - புறத்தோற்றம்

"ஐந்தெழுத்தில் பிறந்து ஐந்தெழுத்தில் வளர்ந்து
ஐந்தெழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
ஐந்தெழுத்தில் ஓர் எழுத்தை அறிந்து கூறவல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பத்தில் ஆடுமே" - சிவவாக்கிய சித்தர்

"நமசிவய" என்ற இந்த ஐந்தெழுத்து தத்துவத்தில்தான் நாம் பிறந்து வருகிறோம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் நாம் பிறந்து இவற்றிலிருந்து வெளிப்படுத்தப்படும் சக்தியால் நாம் வளர்கிறேம்.

"நமசிவய" "ய" என்ற எழுத்தில் உற்பத்தியான உயிர் (விந்து) காமம் ஏற்பட்ட "சி" என்ற எழுத்தில் உஷ்ண (நெருப்பு) தத்துவத்தால் ஆகாயத்திலிருந்து உடலுக்குள் வந்து "வ" என்ற காற்று தத்துவத்தில் நிறைந்திருந்து, இந்த "சிவய" (நெருப்பு, காற்று, ஆகாயம்) என்பதில் அருவாக இருந்த உயிர் "ம" என்ற நீர் தத்துவத்தால் உருவுக்கு வந்து "ந" என்ற மண் தத்துவமான தாயின் கருவறையில் பஞ்ச பூதங்களின் துணையிலேயே வளர்ந்து இந்த பிரபஞ்சத்தில் மனிதனாக பிறக்கிறான்.

பிறப்பு, இருப்பு, இறப்பு, தெய்வ செயல். பிறப்பது, இறப்பது விதிப்பயன். இருப்பு நம்கையில்
"வெற்றுடம்பாய் பிறந்த நாம்
வெள்ளைத்துணிபோர்த்தி போகும் காலம்"
வரை (இறப்பு) அதாவது நாம் மனிதனாக பிறந்து, இருந்து இந்த பொய் "மெய்" பஞ்சபூதங்களான ஆகாயத்தில் மீண்டும் கலந்து விடுகிறது.

நிலம் (ந) நீர் (ம) நெருப்பு (சி) காற்று (வ) ஆகாயம் (ய) இந்த ஐந்தெழுத்து தத்துவத்தில் தான் நம் பொய் "மெய்" (புறத்தோற்றம்) சுற்றம் சூழ மறைகிறது.
இதைத்தான் சிவவாக்கிய சித்தர் ஐந்தெழுத்தான "நமசிவய" என்பதில் பிறந்து ஐந்தெழுத்தான பஞ்சபூதங்களிலிருந்து வெளிப்படும் சக்தியால் வளர்ந்து, இந்த ஐந்தெழுத்தில் ஒரு எழுத்தை முழுமையாக, முறையாக நாம் அறிந்து ஓதினால் நம்மெய் (உடம்பில்) யினுள்ளே இருக்கும் நாதன் (ஆன்மா) நமக்கு துணைபுரியும் என்று கூறியுள்ளார்.

ஐந்தெழுத்தில் பிறந்து, ஐந்தெழுத்தில் வளர்ந்து, ஐந்தெழுத்தில் நமது புறத்தோற்றம் மறைந்து ஆன்மா ஐந்தெழுத்திலே கலந்து விடுகிறது. இதுவே பிறப்பு, இருப்பு, இறப்புத்தத்துவம்.

நாளைய பதிவில் பதினெட்டு நிலை பற்றிப் பார்ப்போம்.

No comments:

Post a Comment